தமிழகத்தில் பருவமழையானது கடந்த சில நாட்களாக சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதை தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு தென் தமிழகத்தில் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அதி கன மழையானது பெய்தது. இதன் காரணமாக நீர்நிலைகளின் அளவானது அதிகரித்து காணப்பட்டது. தற்பொழுது கடந்த இரண்டு நாட்களாக பருவ மழையானது பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பாபநாசத்தில் 30 மில்லி மீட்டரும், மணிமுத்தாறில் 12 மில்லி மீட்டர் மற்றும் சேர்வலாறில் 21 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து பாபநாச அணை பகுதியில் 2,358 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மேலும் அணைகளில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கிய நிலையில் மணிமுத்தாறு அணையிலிருந்து 1,728 கனஅடி தண்ணீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் 303 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.