தமிழ்நாடு அரசின் அனைத்து நல திட்டங்களும் மக்களை முழுமையாக சென்றடைவதற்காக தற்பொழுது தமிழ்நாடு அரசு உங்களைத் தேடி உங்கள் ஊர் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை பற்றி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மாதத்தில் நான்காவது புதன் கிழமை கலெக்டர் தலைமையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று முதல் தொடங்க இருக்கும் இந்த புதிய திட்டம் மாவட்ட கலெக்டர் ஏதாவது ஒரு ஊரை தேர்ந்தெடுத்து அந்த கிராமத்திற்கு சென்று பணியை தொடங்குவார் என்றும் அந்த கிராமத்திலேயே கலெக்டர் 24 மணி நேரமும் தங்கி இருந்து ஊர் மக்களுக்கு அரசின் பல்வேறு வகையான திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து அதற்காக ஒரு திட்டத்தை செயல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் குறைகளை மனுக்களாக பெற்று கூடிய விரைவில் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக அனைத்து கிராமங்களுக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.