திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நோயாளிக்கு ட்ரிப்ஸ் செலுத்திய தூய்மை பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியில் இருந்த செவிலியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு தூய்மை பணியாளர் ட்ரிப்ஸ் செலுத்திய வீடியோ தற்பொழுது இணையதளத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.
இதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் சுகாதார இணை இயக்குனர் திலகா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அன்று அந்த வார்டில் பணியில் இருந்த செவிலியர் சித்ராவை பணியிடை மாற்றம் செய்துள்ளார். செவிலியர் சித்ராவை நல்லிணக்கத்துக்கும் தலைமைச் செவிலியர் ஆக பணியில் இருந்த வசுமதி செவிலியரை வலங்கைமானுக்கும் பணியிடை மாற்றம் செய்ய அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து நோயாளிக்கு ட்ரிக்ஸ் செலுத்திய தூய்மை பணியாளர் கஸ்தூரியை 15 நாட்களுக்கு பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த வீடியோ காட்சிகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளுக்கு போதிய அளவில் செவிலியர் மற்றும் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசிடம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.