2025ம் ஆண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டியுடன் சேர்ந்து 74 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், தற்போது வரை 60 போட்டிகள் நிறைவடைந்துள்ளது.
இதில் 10 அணிகள் விளையாடி வரும் நிலையில், முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ஏற்கெனவே தகுதிச்சுற்று வாய்ப்பை இழந்துவிட்டனர்.
ப்ளே ஆஃப் சுற்றில் உள்ள 3 அணிகள்
தற்போது வரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 9 வெற்றிகளை பெற்று, 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அடுத்ததாக 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி 8 வெற்றிகளை பெற்று 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான PBKS அணி புள்ளிப்பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது.
இந்த மூன்று அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
4வது இடத்தை பிடிக்கப்போகும் அணி எது?
தற்போது புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ள MI அணி 12 போட்டியில் விளையாடி 7 வெற்றி, 5 தோல்விகளுடன் 14 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் மீதமுள்ள 2 போட்டிகளையும் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் உள்ளது.
புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ள DC அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 13 புள்ளிகளை பெற்றுள்ளது.
LSG அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ள நிலையில், 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் ரன் அடிப்படையில் தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இருந்தாலும் MI, DC அணி போட்டிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
வாழ்வா? சாவா? போட்டியில் MI-DC அணிகள்
மே 21 ஆம் தேதி நடைபெற உள்ள MI-DC அணிகளுக்கு இடையேயான போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல அதிகபட்ச வாய்ப்புள்ளது.
இந்த போட்டியில், DC அணி வென்றால் 15 புள்ளிகள் உடன் 4ஆவது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. MI அணி வெற்றிபெறும் பட்சத்தில் 8 வெற்றிகளைப் பெற்று, 16 புள்ளிகளுடன் MI அணி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்திலேயே நீடிக்கும். ப்ளே ஆஃப் வாய்ப்பையும் தக்க வைக்கும்.
எனவே மே 21 ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல், ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.