Home » Blog » வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

by Pramila
0 comment

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம்(ஏப்.2) தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது 12 மணி நேரம் காரசாரமான விவாதம் நடைபெற்றது. பின் இரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது அவையில் 520 எம்பிக்கள் இருந்தனர். மசோதாவை நிறைவேற்ற 272 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 288 உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் நேற்று(ஏப்.3) தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவு வரை நீடித்த விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 128 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 95 பேர் எதிராகவும் வாக்களித்தனர். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

வக்ஃப் என்றால் என்ன?

இஸ்லாம் மதத்தில் தொண்டு நோக்கங்களுக்காக நன்கொடையாக வழங்கப்படும் அசையும் அல்லது அசையாச் சொத்துகளே வக்ஃப் என அழைக்கப்படுகிறது. இந்தச் சொத்துகள் இஸ்லாமிய சமூகத்தின் நன்மைக்காக சமூகத்தின் ஓர் அங்கமாகிறது.

இந்த வக்ஃப் சட்டத்தில் தற்போது மத்திய அரசால் முன்மொழியப்பட்ட பல திருத்தங்கள் ‘தொண்டு’ என்ற கருத்தைக் குறைத்து மதிப்பிடச் செய்யும் முயற்சியாகவும், ஆக்கிரமிப்பாளர்களை சொத்தின் உரிமையாளர்களாக மாற்ற வழிவகை செய்யும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் வக்ஃப் வாரியத்தின் மேலாண்மை மற்றும் நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்தவும், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் சட்டத் திருத்தங்கள் தேவை என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது.

சிறுபான்மை விவகார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, வக்ஃப் வாரியத்திடம் தற்போது இந்தியா முழுவதும் சுமார் 8.7 லட்சம் சொத்துகள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.2 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது.

வக்ஃப் சட்டத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு

வக்ஃப் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் அரசியல் நோக்கம் கொண்டவை என பல இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் கூறி வருகின்றன. இது சிறுபான்மையினரின் உரிமைகளை பலவீனப்படுத்தும் மோடியின் இந்து தேசியவாத கட்சியின் முயற்சி என்று அவர்கள் கூறுகின்றனர்.

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா கூறும் மாற்றங்கள்

1. வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் முன்மொழியப்பட்ட திருத்தத்தின்படி, வக்ஃப் நிலத்தை அளவீடு செய்யும் கூடுதல் ஆணையரின் அதிகாரம் திரும்பப் பெறப்பட்டு, அதற்குப் பதிலாக இந்தப் பொறுப்பு தற்போது மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் வழங்கப்பட்டுள்ளது.

2. மத்திய வக்ஃப் கவுன்சிலிலும், மாநில அளவிலான வக்ஃப் வாரியத்திலும் முஸ்லிம் அல்லாத இரண்டு பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

3. புதிய திருத்தங்களின் கீழ், போஹ்ரா மற்றும் அககானி சமூகத்தினருக்கென தனி வக்ஃப் வாரியம் அமைப்பது குறித்தும் பேசப்பட்டுள்ளது.

4. வக்ஃப் சொத்துக்கான பதிவு மத்திய போர்டல் மூலம் செய்யப்பட வேண்டும். இந்த போர்ட்டல் மூலம், முத்தவல்லிகள் (Mutawalli) அதாவது வக்ஃப் சொத்தைக் கவனிப்பவர்கள் சொத்துக் கணக்குகள் பற்றிய தகவல்களை அளிக்க வேண்டும். மேலும், ஆண்டு வருமானம் 5,000 ரூபாய்க்குக் குறைவாக உள்ள சொத்துக்கு வக்ஃப் வாரியத்திற்கு முத்தவல்லி (Mutawalli) செலுத்த வேண்டிய தொகையும் 7 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

5. தற்போதுள்ள மூன்று உறுப்பினர்களைக் கொண்ட வக்ஃப் தீர்ப்பாயம் இரண்டு உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

6. வரம்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கப் புதிய மசோதாவில் விதிமுறை உள்ளது. அதன்படி 12 ஆண்டுகளுக்கும் மேலாக வக்ஃப் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள், இந்தத் திருத்தத்தின் மூலம் உரிமையாளர்களாக முடியும்.

புதிய சட்டத் திருத்தங்களை எதிர்ப்பது ஏன்?

வக்ஃப்-க்கான சட்டத் திருத்தத்தை, வெளிப்படைத்தன்மை மற்றும் சீர்திருத்தம் என்ற பெயரில் அரசாங்கம் செய்கிறது. எனினும், இந்தியாவின் முஸ்லிம் சமூகமும், எதிர்க்கட்சிகளும் இதை கடுமையாக எதிர்க்கின்றன. இந்தத் திருத்தம் வக்ஃப் வாரியத்தின் செயல்பாட்டில் அரசின் தலையீட்டை அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளது.

மத்திய வக்ஃப் கவுன்சிலில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இரண்டு பதவிகளை ஒதுக்குவது நல்லதுதான். ஆனால் இந்து கோவில்களின் வாரியத்திலும் முஸ்லிம்களுக்கு இதேபோன்ற இடஒதுக்கீடு கிடைக்குமா? என பல இஸ்லாமிய அமைப்புகளும், எதிர்க்கட்சியினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த விதிகளைச் சட்டமாக்கினால், வக்ஃப் சொத்துகளில் 99 சதவீதம் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளதால், வக்ஃப் சொத்துகள் பெருமளவில் குறைந்துவிடும். இந்த மாற்றம் ரியல் எஸ்டேட் தொழிலுக்கும், இதுபோன்ற நிலங்களை வைத்திருக்கும் பல பெரிய தொழிலதிபர்களுக்கும் கூடப் பலனளிக்கும் என கூறுகின்றனர்.

வக்ஃப் சொத்துகளைப் பாதுகாக்கும் அதிகாரம் உள்ள வக்ஃப் வாரியத்தைப் பலவீனமாக்கக் கூடியதாக, புதிய சட்டத் திருத்தங்கள் அமைந்துள்ளன. பொதுமக்களின் பயன்பாட்டுக்காக, முஸ்லிம் செல்வந்தர்கள் கொடுத்த சொத்துகளை பள்ளிவாசல்கள், தர்காக்கள் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தம் ஆரோக்கியமானதாக இல்லை என்று குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

மேலும், புதிய சட்டத் திருத்தம், முஸ்லிம் சமூகத்தின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்றும், வக்ஃப் வாரியங்களில் அதிகாரங்களை மையப்படுத்தும் எனவும் கருதப்படுகிறது. மத மற்றும் சமூகப் பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சொத்துகளை மட்டுமே வக்ஃப் வாரியம் உரிமை கோர முடியும். வக்ஃப் வாரியம் தனியார் சொத்துகளில் எந்த உரிமையும் கோர முடியாது. இதுபோன்ற அம்சங்கள் நிறைந்த வக்ஃப் மசோதா, அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று முஸ்லிம்கள் கருதுகின்றனர்.

வக்ஃப் வாரிய திருத்த மசோதா ஒரு திருப்புமுனை- மோடி

வக்ஃப் வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து பிரதமர் மோடி X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது திருப்புமுனையாக அமைந்துள்ளது. நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் இந்த மசோதா உதவும். பல ஆண்டுகளாக வக்ஃப் அமைப்பு வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்து வந்தது. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் வருங்காலத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்” என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இந்த சட்டம் நிறைவேறுமா?

தமிழ்நாடு அரசு இந்த வக்ஃப் வாரிய திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவதை அரசு தாமதப்படுத்தலாமே தவிர, அதனை தடுக்க முடியாது என கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.